பாலில் உள்ள கலப்படத்தைக் கண்டு பிடிக்க புதிய வழி!

Share this :
No comments

கலப்படம் என்பது இன்று, நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து பிரித்தெடுக்க முடியாத ஒரு தனிப் பொருளாக உள்ளது. ஏன், சில நேரங்களில் மூலப் பொருளாகவே கூட உள்ளது. வண்டிக்கு போடும் பெட்ரோலில் இருந்து, நம் உடலுக்கு ஊட்டும் உணவுப் பண்டம் என அனைத்துமே இன்று கலப்படத்தில் திளைக்கிறது. தாய்ப்பாலில் 17 வகையான நச்சுப் பொருட்கள் கலந்து வருவதாக சமீபத்திய ஆய்வு வெளியிட்ட அறிக்கை, குலை நடுங்க வைத்தது. உடுத்தும் ஆடையில் கலப்படம், பூசிக்கொள்ளும் முகப் பூச்சில் கலப்படம் என்றால், அதன் விளைவைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளல்லாம். ஆனால், நாம் உட்கொள்ளும் உணவில் கலப்படம் என்றால், நம் உடலே அதற்கு முழு இரையாகி விடுகிறதே! ஒரு பக்கம் இதை எதிர்த்து போராட்டங்களும் விழிப்புணர்வு கருத்தரங்கங்களும் நடந்து வர, இன்னொரு பக்கம் ஆர்கானிக்கை நோக்கி நாம் ஓட, கலப்படத்தைக் கண்டறிந்து அதை ஒழிக்க இன்னொரு சமூகமும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. அப்படிப் பார்க்கையில், சென்னை ஐ.ஐ.டி யைச் சேர்ந்த இறுதி ஆண்டு பயோ-டெக் மாணவர், அவிசெக் பர்லா நிகழ்த்தியுள்ள கண்டுபிடிப்பு இன்றைய தேதிக்கு மிகவும் தேவையான ஒன்றாக அமைந்துள்ளது. இன்று நம்மில் பாலைப் பாலாகவோ, டீயாகவோ, காப்பியாகவோ, தயிராகவோ உட்கொள்ளாதவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அப்படிப்பட்ட அத்தியாவசிய பண்டமாக இருக்கிறது பால். "அதில் கலப்படம் இருந்தால், எப்படிக் கண்டுபிடிப்பது?" - இதுதான் அவிசெக்கின் கண்டுபிடிப்பும். ஒரு பேப்பர் துண்டைக் கொண்டு பாலில் இருக்கும் கலப்பட வகையை கண்டுபிடிக்க முடியும். பள்ளியில் நாம் வேதியியல் பாடத்தில் செய்த ஆசிட்-பேஸ் லிட்மஸ் டெஸ்ட் போலத்தான் இதுவும். இதனால் யூரியா, க்ளுகோஸ், போரிக் ஆசிட், டிடர்ஜென்ட் ஆகிய நான்கு வகையான கலப்படப் பொருட்களை கண்டு பிடிக்க முடியும். ஒரு சில நொடிகளிலேயே ரிசல்ட்டை அளித்து விடும் இந்த வகை டெஸ்ட்டின், தயாரிப்பும் பயன்பாட்டுக்கு மிக எளிது. நீளமான பேப்பர் துண்டில் பரவி இருக்கும் வேதிப் பொருள், நிறம் மாறி கலப்படம் எதுவும் இருந்தால் காட்டிக் கொடுத்து விடும். இதனால் பால் விநியோகிஸ்தர்கள், விவசாயிகள் மற்றும் பண்ணைகளில் இருந்து பால் வாங்கும் போது, அதன் சுத்தத்தை சோதித்து விடலாம். அப்படி சுத்த அளவுகோலில் குறைவான மதிப்பெண் பெற்றால், அதனை நிராகரித்து விடலாம். இந்தக் கண்டுபிடிப்பிற்காக, "காந்தியன் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு" விருதைப் பெற்றுள்ளார் அவிசெக். இது குறித்து அவிசெக் கூறுகையில், "இதை சாதாரண இன்க்-ஜெட் பிரிண்ட்டர்கள் கொண்டுதான் தயாரிக்கிறோம். பேப்பரில் சிறிய அளவில் வேதிப் பொருட்களை பரவ விடுவோம். மனிதனின் அன்றாட வாழ்விற்கு உதவும் வகையில் ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்து விளைந்ததே இந்தக் கண்டுபிடிப்பு. கலப்படத்தை, அது தோன்றும் இடத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும் " என்றார். இப்போது அவிசெக், தனது குழுவுடன் இணைந்து, வேறு சில கலப்படப் பொருட்களையும் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். பாலில் எவ்வளவு புரதம்,கொழுப்பு, ஆன்டி பயாடிக்ஸ் உள்ளது என்பதைக் கண்டறியும் ஆராய்ச்சியையும் நடத்தி வருகிறார். ஒவ்வொருவரும் இப்படி ஒவ்வொரு பயன்பாட்டு பொருளை எடுத்துக் கொண்டு, அதில் ஆய்வு செய்தால், கலப்படம் காணாமல் போய் விடுமே !

No comments :

Post a Comment