போடியில் ஓ.பி.எஸ். பணம் பட்டுவாடா; செய்தி சேகரித்த நிருபர் தாக்கப்பட்டதாக ராமதாஸ் புகார்

Share this :
No comments


போடியில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பணம் பட்டுவாடா என்றும் இது தொடர்பாக செய்தி சேகரித்த மக்கள் தொலைக்காட்சி நிருபர் தாக்கப்பட்டதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தேனி மாவட்டம் போடி தொகுதியில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அவரது ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை படம் பிடிக்க முயன்ற மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இத்தாக்குதலுக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

போடி தொகுதியில் போட்டியில் போட்டியிடும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஆதிப்பட்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர் நாகராஜன் பதிவு செய்ததால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

பிரச்சாரம் முடிந்து ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து புறப்படும் போது அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு பணம் வினியோகிக்கப்பட்டு இருக்கிறது. அதையும் மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர் படம் பிடித்ததால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் அவரை காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர். இத்தாக்குதலில் அவரது ஒளிப்பதிவு கருவி சேதமடைந்துள்ளது.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக போற்றப்படும் ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள் அவர்களின் கடமையை செய்யும் போது அதிகாரத்தில் இருப்பவர்களால் தாக்கப்படுவது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல. இத்தாக்குதல் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது கண்டிக்கத்தக்கது.

போடி பகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினரும், ஆதரவாளர்கள் மணல் கொள்ளை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர் அம்பலப்படுத்தியதால் அவர் மீது அதிமுகவினர் ஆத்திரத்தில் இருந்ததாகவும், அதை மனதில் கொண்டு தான் இப்போது தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

No comments :

Post a Comment