விஜயகாந்த் என்றுமே பணத்திற்கு அடிமையானது இல்லை: பிரேமலதா பேச்சு

Share this :
No comments


விஜயகாந்த் என்றுமே பணத்துக்கு அடிமையானது கிடையாது என்று திருநெல்வேலி பிரச்சாரத்தில் பிரேமலதா கூறினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி, தமாகா வேட்பாளர்களை ஆதரித்து இந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதன்படி விரேமலதா தென்காசி தொகுதி சுரண்டையில் வாக்கு சேகரித்தார்.

அப்போது பிரேமலதா கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஆட்சி செய்ததில் எந்த முன்னேற்றமும் இல்லை.

அவர்கள் ஏமாற்றத்தையே தந்துள்ளனர். எனவே ஒரு மாற்றம் வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்துக்கின்றனர். அந்த மாற்றத்தை தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி, தமாகாவினரால் மட்டுமே தரமுடியும்.

அதிமுக, திமுக ஆட்சியில் தமிழகத்தில் தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இங்கு வேலையில்லா திண்டாட்டம், குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

அனைத்து சாலைகளும் உருக்குலைந்து போக்குவரத்துக்கே லாயக்கற்ற நிலையில் உள்ளன. அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளது.

அதிமுக, திமுக தலைவர்களின் மீது கடும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் தேமுதிக, தமாகா மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள்மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை.

ஆகவே, அவர்களால் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சியைத் தர முடியும். விஜயகாந்த் என்றுமே பணத்துக்கு அடிமையானது கிடையாது.

அவர் மக்கள் நலக்கூட்டணி தலைவர்களுடன் சேர்ந்து தன்னை பரிசுத்தமானவர் என்று உலகுக்கு நிரூபித்து விட்டார்.

அதிமுகவும், திமுகவும் பணபலத்தை நம்பியே தேர்தலை சந்திக்கின்றன. ஆனால் நாங்கள் மக்களை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கின்றோம்.

அதிமுக மற்றும் திமுகவிற்கு பல முறை வாய்ப்பு அளித்தது போதும். ஒரு முறை விஜயகாந்திற்கு வாக்களித்து முதலமைச்சராக்கி பாருங்கள்.

உங்களின் வாழ்க்கையில் ஏற்றத்தை நாங்கள் தருகிறோம். எங்கள் ஆட்சியில் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும். அனைத்து நதிகளும் இணைக்கப்படும். குளங்கள், ஏரிகள் தூர்வாரப்படும். பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.

பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு மதியம் சத்துணவுடன், காலையில் சிற்றுண்டியும் வழங்கப்படும். புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படும்.

படித்த இளைஞர்கள் 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். வீடு இல்லாத அனைவருக்கும் வீடு கட்டி கொடுக்கப்படும்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் கூட்டத்துக்கு பணமும், உணவும் கொடுத்து கூட்டத்தை சேர்க்கின்றனர்.

அவ்வாறு அழைத்து செல்லப்பட்டவர்களை சுட்டெரிக்கும் வெயிலில் பல மணி நேரம் நெரிசலில் நிற்க வைத்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா எப்போதும் "மக்களால் நான், மக்களோடு நான்" என்று கூறுகிறார். அவர் கொளுத்தும் வெயிலில் மக்களுடன் நின்று பேச வேண்டியதுதானே. நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைப்போம். இவ்வாறு அப்போது பிரேமலதா கூறினார்.

No comments :

Post a Comment