எவ்வளவுதான் தைரியமான பெண்ணாக இருந்தாலும், இரவு நேரங்களில் தனியாகச் செல்லும்போது அனிச்சையாக ஒரு சின்ன பயம் ஏற்படத்தான் செய்கிறது.
குறுக்குவழி என்று இருட்டான தெருவுக்குள் டாக்ஸி திரும்பினாலும், நமது வண்டியை யாரோ பின்தொடர்வது போன்ற உணர்வு ஏற்படும்போதும், அடிமனதில் தோன்றும் ஒருவித பதற்றம் வீடு சென்றடையும்வரை ஓய்வதில்லை. இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பெண்கள் எந்தவித பதற்றமுமின்றி வெளியில் சென்று வர மஹாராஷ்ட்ரா காவல்துறையினர் ஒரு புதிய செயலியை ( ஆப் ) உருவாக்கி உள்ளனர். அந்த செயலியின் பெயர் பிரதிசாத் (pratisaad app). மராத்தியில் 'பதில்' என்று அர்த்தம் .
இந்த ஆப் உருவாக்க மூலகாரணமாக இருந்தவர், மஹாராஷ்ட்ரா மாநில டி.ஜி.பி பிரவீன் தீக்ஷித். இதனை செயல்படுத்துவது மிகவும் சுலபம். ஆபத்தில் இருக்கும் பெண், அவசர பட்டனை அழுத்தியதும் 3 கி.மீ சுற்றளவில் உள்ள 10 காவல் அதிகாரிகளுக்கும் , ஆய்வாளருக்கும் அலர்ட் மெசேஜ் சென்றுவிடும். கூடுதலாக கன்ட்ரோல் ரூமுக்கும் ஒரு மெசேஜ் செல்லும். மேலும், அந்தப் பெண் இருக்கும் இடத்தை காண்பித்து, கூடவே அங்கு செல்வதற்கான சிறந்த பாதையையும் காவல் அதிகாரிகளுக்கு காண்பிக்கும். அருகாமையில் இருப்பவர் உதவ முன் வந்ததும், அவர் செல்லும் பாதையை அந்த பெண்ணுக்கு காண்பிக்கும்.
கிட்டதட்ட ஓலா, உபேர் போன்ற கேப் மற்றும் ஆட்டோவுக்கு புக் செய்யும் செயலிகள் போன்ற செயல்பாடுதான். பெண்கள் இந்த செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கி, தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். பெண்கள் பாதுகாப்பில் நம் சமூகம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்றாலும், தற்சமயம் பெண்கள் சிறிது கவலையில்லாமல் வெளியே நடமாட உதவுகிறது இந்தச் செயலி.
'செவ்ரோலட்' கார்களை தயாரிக்கும் ஜெனெரல் மோட்டார்ஸ் நிறுவனம், தன் பெண் ஊழியர்களுக்கு சேஃபர் (SAFER) எனப்படும் பாதுகாப்புக் கருவியை அளித்திருக்கிறது. இதனை செயின்போல கழுத்தில் அணிந்துகொண்டால், இது அவரது ஸ்மார்ட்ஃபோனில் உள்ள சேஃபர் செயலி உடன் இணைந்து செயல்படும். ஆபத்தில் இருப்பதுபோல உணர்ந்தால் அந்த செயினில் உள்ள Pendant ஐ இரண்டு முறை அழுத்த வேண்டும். நாம் தேர்ந்தெடுத்திருக்கும் நபர்களுக்கு இது உடனே அலர்ட் மெசேஜ் அனுப்பும்.
Leaf Wearables என்ற நகை தயாரிக்கும் நிறுவனத்தின் கண்டுபிடிப்புதான் இந்தக் கருவி. குருக்ராம், ஜெனரல் மோட்டார் நிறுவனத்தின் நான்கு கிளைகளில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் இது வழங்கப்பட்டது. இது மட்டும் அல்லாது அதனை எவ்வாறு சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக பயிற்சி வகுப்புகளும் எடுக்கப்பட்டன.
இதனை 15 நிமிடம் சார்ஜ் செய்தால், 7 நாட்கள்வரை சார்ஜ் இருக்கும். இது ஃபோனுடன் ப்ளூ டூத் மூலம் இணைந்து இருப்பதால், அதிக சார்ஜ் தேவைப்படுவதில்லை. இன்னொரு சிறப்பு அம்சம் , Pendant ஐ ஒருமுறை அழுத்தி செல்ஃபி ஃபோட்டோ எடுத்துக் கொள்ளலாம்.
நம்ம ஊருக்கு இதுபோன்ற செயலிகள் எப்போது வரப்போகிறதோ...?
No comments :
Post a Comment