இந்திரா காந்திக்கு ஒரு நீதி? ஜெயலலிதாவுக்கு ஒரு நீதியா? கொதிக்கும் கருணாநிதி

Share this :
No comments


இந்திய வரலாற்றில், இந்திரா காந்திக்கு ஒரு நீதி - ஜெயலலிதாவுக்கு ஒரு நீதியா என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கடந்த 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், உத்தரப்பிரதேசத்தில், ரேபரேலி தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார் பிரதமர் இந்திரா காந்தி.அவரது தேர்தல் வெற்றி செல்லாது என்று அலகாபாத் உயர் நீதி மன்ற நீதிபதி ஜெகன் மோகன்லால் சின்ஹா தீர்ப்பளித்தார்.

காரணம், இந்திரா காந்தி தனது தேர்தல் வெற்றிக்காக இந்திய அரசின் கெஜட் பதிவு பெற்ற அதிகாரியாகப் பணியாற்றிய யஷ்பால்கபூர் அவர்களை தனது தேர்தல் வாய்ப்புகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், இந்திரா காந்தியின் தேர்தல் கூட்டங்களில் உத்தரப் பிரதேச அரசு செய்த ஏற்பாடுகளையும், போலீஸ் படைகளை அங்கு காவல் போட்ட வகையில் விதி மீறல் செய்தார் என்பதையும் நீதிபதி அப்போது தனது உத்தரவில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

அது போலவே, தற்போது 2016 ஆம் ஆண்டு, மே 12ஆம் தேதியோடு பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட ஜெயலலிதா, அதற்குப் பின்பு அறிக்கைகள் வாயிலாக வாக்குகளைக் கேட்டு வந்தார். அவ்வாறு மே 14 ஆம் தேதி மதியம் 1.06 மணிக்கு அதிமுக தோழர்களுக்கு ஜெயலலிதா விடுத்த அறிக்கையை, போயஸ் கார்டனிலிருந்து, முதலமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி, அரசிடமிருந்து மாதந்தோறும் ஊதியம் பெற்று வரும், தங்கையன் என்பவர், தலைமைச் செயலகத்திலுள்ள செய்தி வெளியீட்டுப் பிரிவுக்கு அனுப்புகிறார்.

இதையடுத்து, தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்ட இயக்குநர் குமரகுருபரன், கூடுதல் இயக்குனர் எழிலரசன், உதவி இயக்குநர் சுப்பிரமணியன், மக்கள் தொடர்பு அலுவலர் கலைநேசன் (இவர் அதிமுக எம்எல்ஏ வின் தம்பி), அமைச்சர் வைத்திலிங்கத்தோட சொந்தக்காரரான உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராகுல் , நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு நெருக்கமானவரான துணை இயக்குநர் செல்வராஜ், (இவர்கள் அனைவரும் அரசிடம் மாதந்தோறும் ஊதியம் பெறுவோராகும்) ஆகியோர் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு, உடனே அனைத்து மாவட்ட பிஆர்ஓ அலுவலகங்களுக்கும் ஜெயலலிதாவின் கட்சி அறிக்கையை அனுப்பி, அதனை ஊடகங்களுக்கு அனுப்பச் செய்துள்ளனர்.

இது பற்றி தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உடனடியாக கழக அமைப்புச் செயலாளர் மூலமாக புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு, ஒட்டுமொத்த அரசு அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளே தான் இருப்பார்கள். கட்சி சம்பந்தப்பட்ட அறிக்கைகளை எல்லாம் அந்தந்த கட்சி அலுவலகத்திலிருந்து தான் ஊடகங்களுக்கு அனுப்ப வேண்டும்.

ஆனால் அதிமுக கட்சி சம்மந்தப்பட்ட அறிக்கையை கட்சி அலுவலகத்திலிருந்து அனுப்பாமல், அரசு மெயில் ஐடி மூலம் அனுப்பியுள்ளனர். இந்தச் செய்தி அப்போதே நக்கீரன், ஜுனியர் விகடன் போன்ற இதழ்களில் விரிவாக தெளிவாக வெளிவந்தது.

1975ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி அரசு அலுவலரைப் பயன்படுத்திக் கொண்டார் என்பதற்காக, இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என்று நீதி மன்றம் தீர்ப்பளித்தது. அதுபோலவே, தற்போது 2016 ஆம் ஆண்டு அதே குற்றத்தைச் செய்த ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் செயல்படுமா? செயல்படாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments :

Post a Comment