இதற்கு கருணாநிதி வேறு தொழில் செய்யலாம் : அசிங்கமாக விமர்சித்த வைகோ

இப்படி தேமுதிக நிர்வாகிகளை பணம் கொடுத்து, தங்கள் பக்கம் இழுத்து, அவர்களை விஜயகாந்திற்கு எதிராக செயல்பட வைப்பதற்கு பதிலாக திமுக தலைவர் கருணாநிதி வேறு தொழில் ஒன்றை செய்யலாம் என மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்தது பற்றி விஜயகாந்த் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் தலைமையில், தேமுதிக நிர்வாகிகளும், கட்சி நிர்வாகிகளும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனையடுத்து, சந்திரகுமார் உட்பட பலரையும் கட்சியிலிருந்து நீக்கி நேற்று விஜயகாந்த் உத்தரவிட்டார். இந்நிலையில், இன்று மதியம் மீண்டும் சந்திரகுமார் மீண்டும் பத்திரிக்கையாளரை சந்தித்து பேசினார். அப்போது, இந்த முறை திமுக தலைவர் கருணாநிதிதான் முதலமைச்சராக வருவார். எனவே திமுகவுடன் கூட்டணி வைப்பதுதான் சரியான முடிவு. தேமுதிக தற்போது பிரேமலதாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. மீண்டும், கட்சி விஜயகாந்தின் கட்டுப்பாட்டிற்கு வரவேண்டும். 2021ல் விஜயகாந்தை தமிழகத்தின் முதலமைச்சராக அமர வைப்பதே எங்கள் நோக்கம். எனவே தற்போது அவர் கூட்டணி குறித்த முடிவை பரிசீலனை செய்ய வேண்டும். வைகோதான் இதற்கு காரணம். அவர்தான் பிரேமலதாவிடம் பேசி இந்த கூட்டணியை ஏற்படுத்தினார். அவர்தான் திமுகவை இழிவாக விமர்சிக்குமாறு என்னிடம் கூறினார். நான் திமுகவிடம் பணம் வாங்கியதாக கூறுவது தவறான ஒன்று. அதிமுகவிடம் வைகோ ரூ. 1500 கோடி வாங்கியதாக வெளியான செய்தி உண்மை என்று அவர் ஒத்துக் கொண்டால், நானும் ஒப்புக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த வைகோ “நான் அதிமுகவிடம் பணம் வாங்கவில்லை. திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால்தான் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு தலைக்கு ரூ. 3 கோடி விலை பேசி, தங்கம் பக்கம் இழுத்து, அவர்களை விஜயகாந்திற்கு எதிராக செயல்பட தூண்டி வருகிறது. இதன் மூலம், தேமுதிகவில் பிளவை ஏற்படுத்த கருணாநிதி முயல்கிறார். இப்படி செயல்படுவதற்கு பதில், சந்திரகுமார் வேறு தொழில் செய்யலாம். கருணாநிதியும் வேறு தொழில் ஒன்றை செய்யலாம். அது மிகவும் பழமையான ஒரு தொழில். அதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் பலரும் போராடி வருகின்றனர். அந்த தொழிலை அவர் செய்யலாம்” என்று வைகோ காட்டமாக கூறினார். அதன்பின், எதையோ யோசித்த வைகோ “வேறு தொழில் என்றால், கருணாநிதி நாதஸ்வரம் வாசிக்கும் பரம்பரையிலிருந்து வந்தவர். எனவே அவர் அந்த தொழிலை செய்யலாம்” என கூறினார்.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment