உங்கள் பழைய நகைகள் புதுசுபோல் ஜொலிக்க என்ன செய்யலாம்? சூப்பர் ஐடியா!!! -

Share this :
No comments


நீங்கள் உங்களுடைய சருமம், தலைமுடி, நகங்கள் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதில் எவ்வளவு கவனமாக இருக்கிறீர்கள். அதற்காக தினமும் பல மணிநேரம் செலவிடுகிறீர்கள். அத்துடன் உங்கள் நகைகளைப் பளபளப்பாக வைத்துக் கொள்வதற்கும் கொஞ்சம் நேரத்தை ஒதுக்குங்கள்.

தொடர்ந்து நீங்கள் சில நகைகளை அணிவதாலும் தூசி, புகை போன்ற மாசுபாடுகள் காரணமாகவும் உங்கள் நகை அதன் பொலிவை இழந்து விடுகிறது.

அவ்வாறு பொலிவிழந்த நகைகளை மீண்டும் புதுசு போல் மாற்ற சில எளிய முறைகள் இருக்கின்றன. அவற்றை பின்பற்றினால் உங்கள் பழைய நகைகள் மீண்டும் புதுப்பொலிவுடன் ஜொலிக்கும்.

தங்க நகைகளைப் பராமரித்தல்:

வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் டிடர்ஜென்ட் லிக்விடை ஊற்றுங்கள். அதை மெதுவாக கலக்குங்கள். சோடியம் இல்லாத கார்பனேட் வாட்டர் அல்லது சலவை சோடாவைக்கூட வெதுவெதுப்பாக நீரில் கலந்து பயன்படுத்தலாம்.

அவை இன்னும் விரைவான பலனைத் தரும். இந்த கார்பனேட் கலந்த திரவமானது உங்கள் நகைகளில் படிந்திருக்கும் தூசிகளை எளிதாக வெளியேற்றும்.

முத்துக்களைப் பராமரித்தல்:

முத்து, ரத்தினக்கற்கள் போன்ற மென்மையான நகைகளை வெறும் சோப்பு நீரில் சிறிது நேரம் ஊறவைத்துக் கழுவினாலே போதும். உங்களுக்கு சிறந்த பலன் கிடைக்கும்.

இரண்டு கப் வெதுவெதுப்பான நீரில் மென்மையான சோப்பு நீரைக் கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு அதை எடுத்து தூய்மையான காட்டன் துண்டைக் கொண்டு மென்மையாகத் துடைத்து உலர வைக்கவும்.

வைர நகைகளைப் பராமரித்தல்:

மற்ற நகைகளை விட, வைர நகைகளைப் பராமரிப்பதில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். இரண்டு கப் இளஞ்சூடான நீரில் இரண்டு சொட்டு அமோனியம் கலந்த சோப்பு திரவத்தை ஊற்றுங்கள்.

அதில் நகைகளைப் போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து மென்மையான டூத்பிரஷ் கொண்டு தேய்க்கவும். மென்மையாகத் தேய்த்தால் வைர நகைகள் மீது படிந்திருக்கும் அழுக்குகள் நீங்கிவிடும். பின்னர் சாதாரண நீரில் கழுவியபின் உலர வைக்கவும்.

மாணிக்கக் கற்களை பராமரித்தல்

விலையுயர்ந்த மாணிக்கக் கற்களைச் சுத்தம் செய்யும் போது வெந்நீரைப் பயன்படுத்துதல் கூடாது. அதேபோல் ரசாயனங்கள் கலந்த கிளன்சர்களைப் பயன்படுத்தக்கூடாது. மேலும், டிஸ்யூ பேப்பர், காகிதத் துண்டுகளைக் கொண்டு துடைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் அவை கற்களில் கீறல் ஏற்படுத்திவிடும். அதனால் மாணிக்கக் கற்களைச் சுத்தம் செய்யும்போது சாதாரணமாக கண்ணாடிகளைத் துடைக்கப் பயன்படுத்தும் திரவங்களைப் பயன்படுத்தினாலே போதும்.

தங்க வைர ஆபரணங்களைப் போல சுத்தம் செய்யாமல் மிக எளிமையாக வீட்டில் கண்ணாடி துடைக்கப் பயன்படுத்தக்கூடிய கிளன்சர்களை மட்டும் உபயோகிக்க வேண்டும். அவை தூசிகளை விரைவாக உள்ளிழுத்துக் கொள்ளும்.

அப்போது உங்கள் மாணிக்கக் கற்கள் பொருந்திய நகைகள் உங்கள் கண்ணைப் பறிக்கும் அளவிற்கு ஜொலிப்பதை உணர்வீர்கள்.

அமோனியாவை எப்போது பயன்படுத்த வேண்டும்?

அமோனியா என்பது கிருமிகளை அழிக்கக்கூடிய சக்தி வாய்ந்தது. ஆனால் அது வீரியமிக்க ரசாயனங்களில் ஒன்று. ஆகையால் அதன் விளைவுகளும் அதிகமாகவே இருக்கும். நகைகளைச் சுத்தம் செய்வதற்கு அமோனியா ஒரு நல்ல தீர்வு.

ஆனால் அதை எப்போதாவது தான் பயன்படுத்த வேண்டும். அடிக்கடி நகைகளைச் சுத்தம் செய்ய அமோனியாவைப் பயன்படுத்தக் கூடாது.

பொதுவாக உங்கள் வைர நகைகளைச் சுத்தம் செய்ய சாதாரண நீரில் சோப்பு திரவத்தை மட்டும் கலந்து பயன்படுத்தவும். அமோனியாவைப் பயன்படுத்தும் போது அதில் அதிக அளவு நீரைக் கலந்து பயன்படுத்துங்கள்.

No comments :

Post a Comment