அதிமுக 1000 கோடி பதுக்கல்: பொன்.ராதாகிருஷ்ணன் திடுக் தகவல்
மீனம்பாக்கம்: அதிமுக ரூ.1000 கோடிக்கு மேல் பதுக்கியுள்ளது. தேர்தல் ஆணையம் அதை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று காலை 9 மணிக்கு மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை என்று குற்றம் சாட்டுகிறீர்கள். ஆனால் இப்போது, அதிமுக பிரமுகர் வீட்டில் இருந்துகூட பல கோடி பணம் பறிமுதல் செய்துள்ளதே? தேர்தல் ஆணையம் இப்போதாவது விழித்து கொண்டு, பதுக்கி வைத்திருந்த பல கோடி பணத்தை பறிமுதல் செய்துள்ளதே. அதை நான் பாராட்டுகிறேன். ஆனால், தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்தது மிக குறைந்தளவு பணம்தான்.
இன்னும் ரூ.1000 கோடிக்கும் மேல் தமிழகத்தில் பல இடங்களில் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே இந்த பணம், கொண்டு செல்லப்பட்டு பதுக்கப்பட்டிருக்கின்றன. எனவே தேர்தல் ஆணையம், இன்னும் வேகமாக, சுறுசுறுப்பாக செயல்பட்டு, மேலும் ரூ.1000 கோடிக்கும் மேல், பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும். உங்கள் கட்சியை சேர்ந்த சுப்பிரமணியசாமியே, இந்து அமைப்புகளின் ஆதரவுடன் தமிழகத்தில், பாஜ, 2, 3 இடங்களில் மட்டும் வெற்றி பெறும் என்று கூறியுள்ளாரே? இது அவரது சொந்த கருத்து. பாஜவின் கருத்து அல்ல. இந்தியாவிலேயே அரசியல் கட்சிகளிலேயே பாஜவில் மட்டும்தான் தலைவர்கள், பிரமுகர்கள், தனித்தனியாக அவர்கள் விருப்பம் போல் பேசி கொள்ளலாம். அந்தளவுக்கு சுதந்திரம் உள்ளது. எனவேதான் சுப்பிரமணிய சாமி இப்படி கூறியிருக்கிறார். ஆனால் தமிழகத்தில் யாரும் எதிர்பாராத வகையில் பாஜ, கணிசமான தொகுதிகளில் நல்ல வெற்றியை பெறும்.
தமிழகத்தில் திமுக, அதிமுக, மக்கள் நல கூட்டணி போன்றவைகள் தீவிர பிரசாரத்தை தொடங்கி விட்டன. ஆனால் பாஜ பிரசாரம் மட்டும் மந்தமாக இருப்பது ஏன்? அப்படி ஒன்றும் மந்தமாக இல்லை. எங்களது பிரசாரமும் வேகமாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. வரும் மே முதல் வாரத்தில் பிரதமர் மோடி, பாஜ தலைவர் அமித்ஷா ஆகியோர் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய இருக்கின்றனர். அப்போது பாஜவின் பிரசாரம் மேலும் தீவிரமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment