ஜூன் 1 ம் தேதி மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்படு கிறது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் புதிய பாடத் திட்டங்களை படிக்க தயாராவார்கள். ஆனால் மாற்றம் அவர்களுக்கு மட்டும் இல்லை; பொதுமக்களுக்கும்தான். அந்தளவிற்கு அதிகமான மாற்றங்கள் வரிந்துகட்டி வரப்போகிறது.
சமீபத்தில் மத்திய அரசு பல முந்தைய வரிவிதிப்புகளில் பலவித மாற்றங்களை செய்துள்ளது. இந்த மாற்றங்கள் ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அவை என்னென்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்...
தங்கம் வாங்கும் வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு!
தங்கத்தின் விலை எவ்வளவுதான் உயர்ந்தாலும் மக்கள் தொடர்ந்து தங்கத்தை வாங்கிக் கொண்டுதான் இருப்பார்கள். தங்கத்தை அதிக அளவில் வாங்கும்போது இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும். இதை குறைப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி ரூ.5 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் ஒரு சதவிகிதம் வரி செலுத்த வேண்டும் என 2012ம் ஆண்டு அமல்படுத்தியது. அதன் பிறகு 2016-17 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அதை ரூ.2 லட்சமாக குறைத்தது. இதனால் குறைந்த அளவு நகை வாங்கும் நடுத்தர குடும்பங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டன.
அதாவது தமிழகத்தில் திருமணத்துக்கு குறைந்தது பத்து பவுன் நகை வாங்கினால் கூட ரூ.2 லட்சம் வந்துவிடும். இதனால் கூடுதலாக ஒரு சதவிகிதம் வரி செலுத்த வேண்டும். இந்த வரம்பை மீண்டும் அதிகரிக்க வேண்டுமென நகை கடைகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக மத்திய அரசு மீண்டும் ரூ.5 லட்சமாக தற்போது மாற்றியுள்ளது. இது ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மேலும் ரூ.2 லட்சத்துக்கும் மேல் யார் நகை வாங்கினாலும் பான் கார்டு கட்டாயம். பான் கார்டு இல்லாதவர்கள் படிவம் 16 பூர்த்தி செய்து தரவேண்டும்.
சேவை வரி அதிகரிப்பு!
சேவை வரி 14.5 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக மாறுகிறது. அதாவது விவசாயிகள் நலனுக்காக கிருஷி கல்யாண் செஸ் வரி, கூடுதலாக 0.5 சதவிகிதம் வசூலிக்கப்படும். இதனால் ஓட்டல் பில், தொலைபேசிக் கட்டணம், பயணக் கட்டணங்கள், இன்ஷூரன்ஸ் பிரீமியம் ஆகியவற்றில் கூடுதலாக 0.5 சதவிகிதம் வரி செலுத்த வேண்டியிருக்கும். இது சேவையாக பெறும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும். இதனால் மாத செலவுகள் சற்று கூடுதலாக வாய்ப்பு உள்ளது.
விலை உயரும் கார்
ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான விலை கொண்ட கார் வாங்கும் போது கூடுதலாக 1 சதவிகிதம் வரி செலுத்த வேண்டியிருக்கும்.
ரயில் டிக்கெட் புக்கிங்!
கிரெடிட்,டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக் செய்யும் போது கூடுதலாக சேவை கட்டணம் ரூ.30 வசூலிக்கப்பட்டு வந்தது. இது இனிமேல் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்வே கவுன்டர்களில் கூட்டம் குறையும்.
பிஎஃப் பணத்துக்கான டிடிஎஸ் வரம்பு அதிகரிப்பு!
5 வருடத்துக்கு குறைவாக உள்ள பிஎஃப் கணக்கிலிருந்து எடுக்கப்படும் பணத்துக்கான டிடிஎஸ் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சொந்தமாக தொழில் துவங்குதல், வேலை விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு போவது, வேறு சில காரணங்களினால் வேலை தொடர முடியாத நிலையில் பிஎஃப் பணத்தை வெளியே எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இப்படி எடுக்கும் பணத்துக்கு டிடிஎஸ்(Tax Deducted at Source) பிடித்தம் செய்யப்படும்.
நிதி சட்டம் 2016 பிரிவு 192A ன் படி, பிஎஃப் கணக்கிலிருந்து வெளியே எடுக்கும் பணம் ரூ.30 ஆயிரம் அல்லது அதற்கு குறைவாக இருந்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டுவந்தது. இந்த வரம்பு தற்போது ரூ.50 ஆயிரம் என அதிகரிக்கப்பட்டுள்ளது. டிடிஎஸ் பிடித்தம் செய்வதால் தேவையில்லாமல் பிஎஃப் கணக்கை முடித்து அதிலிருந்து பணத்தை எடுப்பது குறையும். நீண்ட கால சேமிப்பு அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
பிஎஃப் உறுப்பினர்கள் மூத்த குடிமக்கள் படிவம் 15G, மற்றவர்கள் 15H சமர்பித்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யமாட்டார்கள். மேலும் வேலை மாறும் போது பிஎஃப் உறுப்பினர் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு பணத்தை மாற்றும் போது டிடிஎஸ் கிடையாது. மேலும் பான்கார்டு எண் சமர்பித்தால் 10 சதவிகிதம் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். பான் எண் இல்லையெனில் கணக்கிலிருந்து எடுக்கப்படும் தொகைக்கு 34.608 சதவிகிதம் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்.
மேற்கூறிய மாற்றங்களை கவனித்து செயல்படுவது அவசியம் மக்களே!
No comments :
Post a Comment