மீண்டும் வருகிறார்கள் நத்தம் விஸ்வநாதன், வளர்மதி, கோகுல இந்திரா?: திருப்பரங்குன்றத்தில் யாருக்கு வாய்ப்பு

Share this :
No comments


கடந்த 25-ஆம் தேதி உடல்நலக்குறைவால் இறந்த அதிமுக எம்.எல்.ஏ சீனிவேல் போட்டியிட்ட திருப்பரங்குன்றத்தில் வர இருக்கிற இடைத்தேர்தலில் போட்டியிட நத்தம் விஸ்வநாதன், வளர்மதி, கோகுல இந்திரா ஆகிய முன்னாள் அமைச்சர்கள் காய் நகர்த்துவதாக பேசப்படுகிறது.

திருப்பரங்குன்றத்தில் போட்டியிட்ட சீனிவேல் வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக பதவியேற்கும் முன்னரே காலமானார். இதனையடுத்து அந்த தொகுதிக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு சட்டசபைக்கு செல்ல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முயற்சித்து வருகின்றனர்.

நத்தம் விஸ்வநாதன் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு திமுகவின் ஐ.பெரியசாமியிடம் தோல்வியடைந்தார். அதேப்போல் வளர்மதி மற்றும் கோகுல இந்திரா ஆகியோர் ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் தொகுதிகளில் போட்டியிட்டு திமுக வேட்பாளர்களிடம் தோல்வியை தழுவினர். இவர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் முக்கியமான அமைச்சர்களாக இருந்தவர்கள்.

இந்த தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு களம் இறங்கியுள்ள நிலையில், மற்ற தோல்வியடைந்த அமைச்சர்கள் திருப்பரங்குன்றம் தொகுதியை குறிவைத்துள்ளனர்.

இதில் நத்தம் விஸ்வநாதனுக்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் தற்போது இருக்கும் வளர்மதி மதுரையைச் சொந்த ஊராகக் கொண்டவர். கோகுல இந்திரா சிவகங்கையை சொந்த மாவட்டமாக கொண்டவர்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் முக்குலத்தோர் வாக்குகள் அதிகம் உள்ளது, கோகுல இந்திரா முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவரும் இங்கு போட்டியிட முற்சிக்கிறார்.

ஆனாலும் நத்தம் விஸ்வநாதனுக்கு திருப்பரங்குன்றத்தில் வாய்ப்பு கிடைக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் இந்த முன்னாள் அமைச்சர்கள் மீது ஜெயலலிதா கோபமாக இருக்கும் பட்சத்தில் சீனிவேலின் மகனுக்கு அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்படலாம் எனவும் பேசப்படுகிறது.

No comments :

Post a Comment